மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் வயது முதிர்வு காரணமாக கடந்த 13 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்த நிலையில், 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்று கொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் முகநூலில் நித்தியானந்தா முகநூலில் அறிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்கனவே அருணகிரிநாதரால் தான் இளைய ஆதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் ஆதினமாக பொறுப்பேற்ற நிலையில் கைலாசா நாட்டு துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் 293மதுரை ஆதினம் என கூறி தனக்கான பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஆசிரமம் நடத்திய நித்யானந்தா பெங்களூருவில் ஆசிரமத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், திடீரென தலைமறைவான நித்யானந்தா, தற்போது தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள தீவு ஒன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









