”விராட் கோலியின் சதத்தை தடுக்க நினைக்கவில்லை” என வொயிட் பந்து சர்ச்சை குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹஸன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், புனேயில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணி ‘ரெகுலர்’ கேப்டன் சாகிப் அல் ஹசன் காயம் (தொடைப்பகுதி) காரணமாக விலகினார். சான்டோ அணியை வழிநடத்தினார். ‘டாஸ்’ வென்ற இவர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
வங்கதேச அணிக்கு தன்ஜித், லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. தன்ஜித் (51) அரை சதம் அடித்தார். ஜடேஜா ‘சுழலில்’ கேப்டன் சான்டோ (8) சிக்கினார். லிட்டன் அரை சதம் கடந்தார்.
சிராஜ் ‘வேகத்தில்’ மெஹிதி (3) அவுட்டானார். ஜடேஜா பந்துவீச்சில் லிட்டன் (66) ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் 38 ரன் எடுத்தார். மகமதுல்லா (46) கைகொடுக்க, வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. முஸ்டபிஜுர் (1), ஷோரிபுல் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக 257 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 41.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியின் போது விராட் கோலி 97 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற 2ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தது. அப்போது வசிம் அகமது திடிரென வொயிட் பந்தை வீசினார். அப்போது விளையாட்டின் நடுவர் அதனை வொயிட் பந்து என அறிவிக்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்தில் விராட் கோலி சிக்ஸர் விலாசி தனது சதத்தையும் அணியின் வெற்றியையும் பதிவு செய்தார்.
இது தொடர்பாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் தெரிவித்ததாவது..
“ நாங்கள் முறையான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். விராட் கோலியின் சதத்தை தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் அதுபோன்ற திட்டம் கூட கிடையாது. எங்களிடம் இருந்ததெல்லாம் சாதரண திட்டம்தான். எந்த ஒரு பந்து வீச்சாளரும் வொயிட் பந்து வீச வேண்டும் என பந்துவீசுவது கிடையாது. நாங்கள் முறையான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்புகிறோம். நாங்கள் எதையும் வேண்டுமென்று செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.








