“குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்” – ஹேமந்த் சோரன்

தான் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை…

தான் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர்.  கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தார்.  அதன் பின்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும்,  அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.

தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அதைத்தொடர்ந்து,  இன்று சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதலமைச்சர் சம்பாய் சோரன் தாக்கல் செய்தார்.  ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறையினருடன் பேரவைக்கு வந்தார் ஹேமந்த் சோரன் . நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

“ஜனவரி 31ஆம் தேதி இரவு,  நாட்டிலேயே முதன்முறையாக ஒரு மாநில முதலமைச்சர் கைது செய்யப்பட்டார்.  எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நினைக்கிறேன்.  நான் கைது செய்யப்பட்ட ஜன.31ம் தேதி,  இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும்.  என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும்.

பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்.  சவால் விடுக்கிறேன். அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.  ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்.  ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது.  பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை.” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.