பிரதமர் மோடியை பார்த்து நான் வியந்து கொண்டிருக்கிறேன்- இளையராஜா

பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் என இளையராஜா கூறினார். தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும்…

பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் என இளையராஜா கூறினார்.

தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இளையராஜா, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா எம்.பி., காசி நகருக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. துளதிதாசர் தோஹா வழியில் ஆன்மீக பாடல்களை இரண்டு வரிகளில் 2 அடிகளில் பாடியுள்ளார்.

அதேபோல் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளை மூன்று அதிகாரங்களாக பிரித்து அய்யன் வள்ளுவன் இரண்டு வரிகளில் 2 அடிகளில் திருக்குறளை இயற்றியுள்ளார். தோஹா 8 சீர்களை கொண்டது. திருக்குறள் 7 சீர்களை கொண்டது. கபிர் தாஸ் இரண்டு அடிகளில் ஆன்மீகத்தை பாட, திருவள்ளுவர் உலக வாழ்வியல் முறையை இரண்டு அடிகளில் பாடியுள்ளார்.

இவ்வாறு தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே பல்வேறு தொடர்புகள் இருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இங்கே நடத்துவது எவ்வாறு தோன்றியது என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது. இதை நினைத்து பிரதமர் மோடியை பார்த்து நான் வியந்து கொண்டிருக்கிறேன்.

இதேபோல் நதிநீர் இணைப்பு திட்டத்தை அன்றே பாடினார் பாரதியார். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி. காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.