நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கவுண்டமணி சுமார் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார். நடிகர் செந்திலுடன் இவர் இணைந்து நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்தன. கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன் என கவுண்டமணி நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில்,’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற முழு நீள நகைச்சுவை படத்தில் கவுண்டமணி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, கூல் சுரேஷ், உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ராஜகோபால் கூறியதாவது : “ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது உடனே சம்மதம் தெரிவித்தார். அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.







