இரண்டு குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியான தன்னை கைவிட்டுச் சென்ற தனது கணவனை மீட்டுத் தருமாறு இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (31). தனது 3 வயது மகன், 1 வயது மகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். தற்போது 9 மாத கர்ப்பிணியான ஸ்ரீதேவி சிறு வயதில் இருந்தே தாய், தந்தை இல்லாமல் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் என்பவரை மேட்ரிமோனியல் மூலம் சந்தித்து திருமணம் செய்து கொண்டு பெரம்பூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். டேனியல், ராமாபுரத்தில் செயல்படும் கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணி புரிவதாகவும், சினிமா கிராபிக்ஸ் பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் கணவர் கடந்த 5 மாதமாக குழந்தைகளுடன் தனது கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது கணவனைக் காணவில்லை என புகார் அளித்து திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டேனியலை தேடிக் கண்டுபிடித்தனர். 2 மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட டேனியல் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதாக கூறி விட்டு அதன்பிறகு திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கர்ப்பிணியான ஸ்ரீதேவி தனது 2 குழந்தைகளுடன் வந்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது கணவரை அவருடைய அண்ணன், அண்ணியும் அபகரித்து வைத்துள்ளனர். வாடகை வீட்டில் தங்கியிருக்கும் நான் வாடகை கொடுக்க முடியாமல் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தரக் கூட பணமில்லாமல் கடந்த 5 மாதங்களாக தவிக்கிறேன். காவல்துறை தலையிட்டு எனது கணவரை மீட்டுத்தர வேண்டும்” என கண்ணீர் விட்டு அழுதார்.
உறவினர்கள் யார் துணையும் இல்லாமல் தனியாக வசித்து வரும் தனக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டால் கூட உதவி செய்ய யாரும் இல்லை என கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.







