தம்பதி இடையே தகராறு இருந்துவந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கழுத்து நரம்புகள் அறுபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதன் பகீர் பின்னணி நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சன்னராயனபட்னா தாலுகா, ஹொலே நரசிபுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் சைத்ரா, சிவகுமார் தம்பதி. இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களின் திருமண வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் சண்டை முற்றி மனைவி சைத்ராவை கணவன் சிவகுமார் தாக்குவது வழக்கமாகியுள்ளது. அதனால், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முடியாது என முடிவெடுத்தவர்கள், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
சம்பவத்தன்று சன்னராயனபட்னாவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரான இருவருக்கும் நீதிபதி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றும், உங்களின் பிரிவால் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை எடுத்துக்கூறி கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக கணவன், மனைவி இருவருக்கும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
சிவகுமாரின் மனைவி சைத்ராவும் இதை ஒப்புக் கொண்டதாகவே தெரிகிறது. நீதிபதியின் வார்த்தைகளைக் கேட்ட சிவகுமார் சரிசரியென தலையை ஆட்டியிருக்கிறார். அவருக்குள் மிகப்பெரும் வன்மம் மறைந்திருப்பது நீதிபதியின் அறையைவிட்டு வெளியே வந்த பின்தான் தெரியவந்திருக்கிறது. நீதிபதியின் அறையைவிட்டு வெளியேறிய சைத்ரா, கழிவறைக்கு செல்ல நடந்து சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த சிவகுமார் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைத்ராவை பலமாக குத்தியிருக்கிறார். இதில் கழுத்து பக்கத்தில் கத்திக்குத்து ஆழமாக விழுந்திருக்கிறது. அப்போது அருகில் இருந்த மகனையும் கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார்.
பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொடூரத்தைப் பார்த்த மக்கள் சிவகுமாரை தடுத்து மகனைக் காப்பாற்றியுள்ளனர். ஆனாலும் ஆவேசம் அடங்காத சிவகுமார் கத்தியை கொண்டு மனைவியையும், மகனையும் கொலை செய்ய மீண்டும் முயற்சி செய்துள்ளார். சூதாரித்துக் கொண்ட மக்கள் அவரை அடித்து இழுத்துச் சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த தாய், மகன் இருவரையும், சன்னராயனபட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு சைத்ராவுக்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஹாசன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கழுத்துப் பகுதியில் காயம் ஆழமாக இருப்பதால் நரம்புகள் அறுந்துவிட்டன. அதனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்த போலீஸார் அவது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, கணவன் சிவகுமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கணவனுடன் சேர்ந்து வாழும் நோக்கத்தில் நீதிமன்றத்திற்கு வந்த மனைவியை, கணவனே குத்திக் கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது.
-ம.பவித்ரா