1947ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது ஒற்றை இலக்கத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதார அந்தஸ்து அதன் பின் இரட்டை இலக்கத்தை கடந்து தற்போது மூன்று இலக்கத்தில் முன்னணி நிலையை அடைந்துள்ளது. 75ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மேற்கொண்ட பாய்ச்சல், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற நிலையை அடையச் செய்துள்ளது.
கொரோனா, உலக பொருளாதார மந்த நிலை என எத்தனையோ இடையூறுகளை எதிர்கொண்டாலும் அதனை தடைக்கற்களாக எண்ணாமல் படிக்கற்களாக எண்ணி 5 டிரில்லியன் டாலர் பொருளதாரம் ஆதாவது சுமார் 400 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்கிற இலக்கினை நோக்கி இந்தியா தனது பயணத்தை வேகமெடுத்துள்ளது.
கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, கடந்த 75 ஆண்டுகளில் பொருதார வளர்ச்சியில் அடைந்த எழுச்சி எத்தகையது என்பதை அறிய பல்வேறு விஷயங்களில் அப்போதைய நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளில் அதாவது 1950-51 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.79 லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவிலேயே இருந்தது தற்போது அந்த அளவு 281 லட்சத்து 56, 275 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதாரம் என்கிற நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது.
தனி நபர் வருமானம்
1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றபோது 249 ரூபாய் என்கிற அளவிலேயே இருந்த ஆண்டு தனிநபர் வருமானம் தற்போது 500 மடங்கு உயர்ந்து 2021-22ம் ஆண்டு நிதி ஆண்டில் சுமார் ஒன்றரை லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் வருவாய்
1947-48ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.171.15 கோடி என்கிற அளவிலேயே இருந்தது. ஆனால் கடந்த 2021-2022ம் ஆண்டு பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மத்திய அரசின் மொத்த வருவாய் 20,78,936 கோடி ரூபாய்.
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவு குறைந்தது முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இந்தியா வலுவாகவே உள்ளது. 1950-51 நிதியாண்டில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்திய மதிப்புபடி ரூ.911 கோடியாகதான் இருந்தது. ஆனால் கடந்த 5ந்தேதி நிலவரப்படி நாட்டின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.45,42,615 கோடி.
அந்நிய வர்த்தகம்
1950-51ம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை இணைந்து இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தின் மதிப்பு ரூ.1,214 கோடி. ஆனால் கடந்த ஜூலை மாதக் கணக்கின்படி இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 143 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்புபடி 11,39,567 கோடி ரூபாய்.
உணவுதானிய உற்பத்தி
75 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சியில் பளிச்சென தெரியும் அம்சம் வேளாண் உற்பத்தியின் விஸ்வரூபம். இந்தியா சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளில் எடுத்தக் கணக்கின்படி, இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி 50.8 மில்லியன் டன். 2020-2021ம் நிதி ஆண்டில் எடுத்தக் கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி 316.06 மில்லியன் டன்
ராணுவ பட்ஜெட் அளவு
ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடும் காரணிகளில் ஒன்றாக அந்நாட்டு ராணுவத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையும் மேற்கோள்காட்டப்படுவதுண்டு. அந்த வகையில் 1947ம் ஆண்டுக்கும் 2022ம் ஆண்டுக்கும் இடையே ராணுவத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை 5,662 மடங்கு அதிகரித்துள்ளது. 1947ம் ஆண்டு ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 92.74 கோடி ரூபாய். 2022-2023 ஆண்டு நிதி ஆண்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 5,25,166 கோடி ரூபாய். 14 லட்சம் பேரை உள்ளடக்கிய உலகின் இரண்டாது பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் விளங்குகிறது.
தொலைபேசி இணைப்புகள்
75 ஆண்டுகளில் இந்தியா எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கு உதாரணமாக நாட்டின் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையையும் குறிப்பிடலாம். நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் இந்தியாவில் உள்ள மொத்த தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரம்தான். கடந்த மே மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த தொலைபேசி மற்றும் அலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117 கோடி
எழுத்தறிவு பெற்றோர் விகிதம்
1951ம் ஆண்டு எடுத்த கணக்கின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 18.3 சதவீதம்தான். ஆனால் 2022ம் ஆண்டில் இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 77.7 குறிப்பாக எழுத்தறிவு பெற்ற பெண்களின் விகிதம் பெருமளவு அதிகரித்துள்ளது. உயர் கல்வியிலும் இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 1951ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரப்படி அப்போது இந்தியாவில் 27 பல்கலைக்கழகங்களும் 578 கல்லூரிகளும் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஆயிரம் பல்கலைக்கழகங்களுக்கும் மேல் உள்ளன. 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.
சுகாதாரத்துறை எழுச்சி
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் மொத்தம் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 28 ஆனால் தற்போது இந்தியாவில் மொத்தம் 612 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 2022-2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 86.2 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாட்டவர்கள் மருத்துவத்திற்காக இந்தியாவை தேடி வரும் வகையில், சுகாதாரத்துறையில் இந்தியா சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் முன்னணியில் இருந்து போராடிய இந்தியா 200 கோடி டோஸ்களுக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலக சுகாதார மையமே வெகுவாக பாராட்டியது.
விண்வெளித்துறை வளர்ச்சி
கடந்த 75 ஆண்டுகளில் உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்கவைத்த துறைகளில் விண்வெளித்துறை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு செயற்கைகோள்களை வர்த்தக அடிப்படையில் விண்வெளியில் செலுத்துவதில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி வைத்து அமெரிக்காவையே ஆச்சர்யம் கொள்ள வைத்தது இந்தியா.
இப்படி பல்வேறு காரணிகள் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியையும், எழுச்சியையும் உலகிற்கு பறைசாற்றி வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதுபோல் இந்தியா தன்னிடம் விலைமதிப்பற்ற திறன் இருப்பதை கடந்த 75 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. விரைவில் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இணையும் என்கிற நம்பிக்கை இந்த 75வது சுதந்திர தின கொண்டாட்ட நாளில் மேலோங்கியுள்ளது.
>எஸ். இலட்சுமணன்










