இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடர் இந்தியாவில் உள்ள முக்கியமான 10 மைதானங்களில் நடக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது
“ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதை நான் அருகிலிருந்து பார்த்ததே இல்லை. இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போதும் நான் அணியில் விளையாடவில்லை. ஆனால், அது மிகவும் அழகான தருணம். உலகக் கோப்பை வெல்வதன் பின்னணியில் நிறைய நினைவுகள் இருக்கிறது. இந்தியாவில் நாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பது எங்களுக்கு நிச்சயமாக தெரியும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. நாங்கள் கடந்த 2016ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தோம். ஆனால், கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடியது.
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்







