“ராஜஸ்தானில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்; தமிழ்நாட்டில் எப்போது?” – ராமதாஸ் கேள்வி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”ராஜஸ்தான்…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

”ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

சிறியவையே அழகு என்ற தத்துவத்தின் அடிப்படையில் பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களாக்க வேண்டும். அது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரியும். 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் வீதம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு தாமதித்து வரும் நிலையில், ராஜஸ்தான் அரசு முந்திக் கொண்டது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு ராஜஸ்தான் மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 13 லட்சம். ஆனால், தமிழ்நாடு மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 19 லட்சமாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 25. மாவட்டங்களின் எண்ணிக்கை 50. அதாவது ஒரு மக்களவைத் தொகுதியில் இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? என்பதை அரசு சிந்திக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா போன்ற மாநிலங்கள் புதிய மாவட்டங்களை அமைத்த பிறகு அனைத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாடும் அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு மாவட்ட மறுசீரமைப்பு ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.”

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.