கோலிவுட்டில் இந்த வாரம் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம், எல்.எஸ்.எஸ், மை டியர் டாலி, அறிவான் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜயின் கில்லி, அஜித்தின் துணிவு ஆகிய படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக….
செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்
கே.ஜி.எப், காந்தாரா, சார்லி 777 போன்ற படங்கள் வரிசையில், கன்னடத்தில் இருந்து தமிழுக்கு டப்பாகி இருக்கும் சிறந்த படம் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் என்று சொல்லலாம். வரிசையாக நடக்கும் கொடூர கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கதை என்றாலும், அதை சொன்ன விதத்தில் கலக்கியிருக்கிறார் இயக்குனர் தேவிபிரசாத் ஷெட்டி. மங்களூர் பகுதியில் உள்ள சின்ன டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ஹீரோ விஜய் ராகவேந்திரா. அவர் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட பகுதிகளில் 50 வயதுள்ள ஆண்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள். ஒரு மாதிரி பாணியில் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அது குறித்து தீவிரமாக விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர். ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட வாத்தியார் மீது அவருக்கு முதலில் சந்தேகம் வருகிறது. அடுத்து ஒரு இளைஞன்தான் கொலைகளை செய்து இருப்பான் என முடிவுக்கு வருகிறார். ஆனால், அவர்கள் இருவரும் இறந்து போகிறார்கள். அப்படியானால் அந்த தொடர் கொலைகளை செய்தது யார்?
அந்த கொலையாளி இப்படி கொடூரமாக கொன்றுவிட்டு, ஒரு வீணை பொம்மையை தடயமாக விட்டு செல்வது ஏன் என்ற ரீதியில் கதை செல்கிறது. கடைசியில் கொலையாளியிடம் இன்ஸ்பெக்டரின் அக்கா மாப்பிள்ளையும் சிக்க, அவரை மீட்டாரா என்ற பதைபதைப்புடன் கிளைமாக்சை சொல்லி, கொலையாளியை கண்டுபிடித்தாரா என்று முடிக்கிறார் இயக்குனர். படம் முழுக்க கொலை, விசாரணை, சேசிங்தான். ஹீரோயிசம், பில்டப், காதல், காமெடி, கலர்புல் சாங் இதெல்லாம் இல்லை. ஆனால், கொலைக்கான காரணத்தை சொல்லும் இடத்தில் ஒரு வலுவான பாசம் இருக்கிறது. உளவியல் நோக்கில் பாதிக்கப்படுபவரின் மனநிலையை, அந்த பக்கம் இருந்து தெளிவாக காண்பிக்கிறார் இயக்குனர். சின்ன சின்ன கேரக்டர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
போலீஸ் விசாரணை காட்சிகள் படத்தின் பெரிய பலம். கொலைகள், கொலையாளிகள் பற்றிய தகவல்கள், அவர்களை தேடி போலீஸ் செல்வது ஆகியவை விறுவிறுப்பு. கொலையாளி குறித்த பிளாஷ்பேக் காட்சிகள் உண்மையிலே மிரட்டல். அதில் சொல்லப்படும் விஷயங்கள், ஒருவகை பாசம் உருக்கம். யாரும் எதிர்பார்த்திராத வகையில் இவர்தான் கொலையாளி என காட்டும் கிளைமாக்ஸ் இன்னும் சுவாரஸ்யம். போலீசாக வரும் விஜய் ராகவேந்திராவின் நடிப்பும், அவர் யோசிக்கும் விதமும், கொலையாளியை நெருங்கும் விதமும் பரபரப்பு. சில சமயம் மலையாள படம் பார்ப்பது போல இருக்கிறது. மங்களூர் ஏரியா பின்னணி, இயல்பான கேரக்டர்கள், சினிமாத்தனம் இல்லாத முகங்கள் படத்தை நமக்கு நெருக்கமாக்கி இருக்கிறது. ஹேமந்தின் கேமரா வொர்க், நவ்நீத்தின் இசை ஆகியவை படத்தை இன்னும் வேகப்படுத்தி இருக்கின்றன. கதைக்கும், வீணைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆகவே, முக்கியமான திரில்லர் காட்சிகளில் வீணை இசையை பயன்படுத்தி கலக்கியிருக்கிறார் இயக்குனர். மாறுபட்ட திரைக்கதை, திருப்பங்கள், இயல்பான நடிப்பு, கிளைமாக்ஸ், பின்னணி இசை இதெல்லாம் படத்தை துாக்கி நிறுத்தி, பார்வையாளர்களை கட்டிபோடுகிறது.
கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, வித்தியாசமான எடிட்டிங், வேறு கமர்ஷியல் விஷயங்கள் இல்லை என்ற குறைகள் இருந்தாலும், அட, இப்படிப்பட்ட படங்களை தமிழ் சினிமாவில் ஏன் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட கதைகளை நம் ஹீரோக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது வருகிறது. எத்தனையோ கொலைக்கதைகள், திரில்லர் படங்களை பார்த்தாலும் செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் மறக்க முடியாத படமாக இருக்கும்.
மை டியர் டாலி
தனது ஆபீசில் வேலை செய்யும் அனுபமாவை காதலிக்கிறார் வி.ஜே.பப்பு. அவர் வேறு ஒருவரை காதலிக்க அந்த ஆபீசை விட்டு விலகுகிறார். ஆனால், விதிவசத்தால் அனுபமாவே பப்பு மனைவி ஆகிறார். நமக்குள் எந்த உறவும் வேண்டாம். 6 மாதத்தில் பிரிவோம் என்ற கண்டிசனுடன் வாழ்ந்து, அவரை பிரிகிறார் அனுபமா. மனைவி வீட்டை விட்டு சென்றபின் அவரை போலவே ஒரு பொம்மை செய்து அதனுடன் வாழ்கிறார் பப்பு. அதை அறிந்த அனுபமா தானே அந்த பொம்மையாக நடிக்கிறார். பப்புவின் பாசத்தை உணர்கிறார். இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இதுதான் மை டியர் டாலி படக்கதை.
இப்ப்டத்தை அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். காதல், மோதல், கணவன் மனைவி சண்டை என முதற்பாதி வழக்கமாக செல்கிறது. அனுபமா பொம்மையாக நடிக்கும்போது படம் ஸ்பீடு ஆகிறது. குடித்துவிட்டு பொம்மை என நினைத்து அனுபமாவுடன் புலம்பும் இடங்களில் பப்பு நடிப்பு பிரமாதம். குறிப்பாக, எலி வீட்டில் தொல்லை செய்கிறது என நினைத்து அவர் அடிக்கும் லுாட்டி சூப்பர். ஆனாலும், இன்னும் நன்றாக நடித்து இருக்கலாம். கணவன் மீதான பாசத்தை உணர்ந்து கலங்கும் இடங்களில் அனுபமாவும் ஸ்கோர் செய்து இருக்கிறார். பொம்மை மூலமாக காதலை செல்லும் வித்தியாசமான முயற்சி. அனுபமா, மாமியார் போர்ஷன் கலகல. இடைவேளைக்குபின் சில இடங்களில் கதை ரசிக்கும்படி இருக்கிறது. ஆனாலும், நிறைய இடங்களில் போராடிக்கிறது.
அறிவான்
போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஆனந்த் நாக், சில கொலைகளை பற்றி துப்பறிகிறார். அப்போது அவர் ஸ்டேஷனிலேயே விசாரணைக்கு வந்த பெண்ணும் கொல்லப்படுகிறார். இந்த கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளிகள் யார்? என்று குழம்பும்போது, பத்திரிகையாளரான ஹீரோயின் ஜனனியால் அவருக்கு சில விஷயங்கள் தெரிய வருகிறது. பல ஆண்டுகளுக்குமுன்பு இதே பாணியில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றி விசாரிக்க, அவருக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. அந்த கொலையாளி கடைசியில் ஜனனியை கொலை செய்ய முயற்சிக்க, ஹீரோ காப்பாற்றினாரா? அந்த கொலையாளிகள் யார்? இப்படி கொலை செய்யும் அளவுக்கு அவர்களை பாதித்த சம்பவம் எது என்பது அறிவான் கதை.
அருண்பிரசாத் இயக்கிருக்கும் இப்படத்தில் கொலைகளை கண்டுபிடிக்கும் திரில்லர் கதை என்றாலும், கொலை நடக்கும் விதம், அடுத்து நடக்கும் சம்பவங்கள், கொலையாளியின் புத்திசாலிதனம் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் எப்படி யோசித்து கொலையாளியை நெருங்குகிறார் என்பது விறுவிறுப்பு. கொலையாளிகள் பற்றிய பிளாஷ்பேக் சம்பவம் படத்தின் உயிர் நாடி. அதில் சொல்லப்படும் விஷயங்கள், நடக்கும் சம்பவங்கள் பதைபதைக்க வைக்கின்றன. அதேபோல் கிளைமாக்ஸ் பரபரப்பு. ஹீரோ தனது பங்கை சரியாக செய்து இ ருக்கிறார். ஜனனிக்கு பெரிதாக வேலை இல்லை. கொலையாளியாக வரும் அந்த 2பேரும் கடைசி அரை மணி நேரம் மிரட்டுகிறார்கள். பெரிதாக குறைகள் இல்லாத, ஒரு மாறுபட்ட முயற்சி.
எல்.எஸ்.எஸ்
வடஇந்திய பெண்ணான சிம்ரன் அத்வானியை காதலிக்கிறார் ஹீரோ ஆதவ் கிருஷ்ணா. என் அம்மாவிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஹீரோவை காசிக்கு அழைத்து செல்கிறார் ஹீரோயின்.அங்கே அவர் திடீரென காணாமல் போகிறார்.ஹீரோவும், ஹீரோயின் தந்தையும் அவரை தேடுகிறார்கள். உண்மையில் ஹீரோயினுக்கு என்ன நடந்தது. காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது எல் எஸ். எஸ் படத்தின் கதை.
லவ், ஷேர், சப்ஸ்கிரைப் என்பதன் சுருக்கம் இந்த தலைப்பு. இப்படத்தை லட்சுமி முருகன் இயக்கி உள்ளார். காதல், பாடல் என்று முதல் பாதி வழக்கமான படமாக செல்லும் படம் காசிக்கு காதலர்கள் செல்வதில் இருந்தும், ஹீரோயின் காணாமல் போவதில் இருந்தும் சூடுபிடிக்கிறது. ஹீரோ நடிப்பு ஓகே. ஹீரோ சிம்ரன் அழகாக இருக்கிறார், ஓரளவு நன்றாக நடிக்கிறார். அவர் அம்மாவாக வரும் கேரக்டரும் மனதில் நிற்கிறது. ஹீரோவின் அம்மாவாக வரும் வினோதினி சில சீன்களில் வந்தாலும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார். ஆனால், ஹீரோயின் தந்தை, அவர் சம்பந்தப்பட்ட காசி சீன்களில் வலு இல்லை. ஆஸ்பிட்டல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் போராடிக்கிறது. கிளைமாக்ஸ் எல்லாரும் எதிர்பார்த்ததுதான். அவ்வப்போது வந்து சாம்ஸ் அடிக்கும் காமெடி பரவாயில்லை. புதுமுகங்கள் நடித்து இருப்பதாலும், திரைக்கதையில் புதுமை இல்லாததாலும் படம் சுமாராக இருக்கிறது.
விஜய் நடித்த கில்லி படமும் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஜனநாயகன் வராததால், இந்த படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு போட்டியாக அஜித்தின் துணிவு ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்களுக்கு வார இறுதியில் ஓரளவு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளது.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்












