இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க கற்றுக்கொடுக்கும் மையம் வியட்நாமில் தொடங்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களின் பயன்பாடு காலத்திற்கேற்ப மாறிவருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் இளைஞர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. நேரம் செல்வது கூட தெரியாமல் இளைஞர்கள் இரவு முழுவதும் ஃபேஸ்புக்கிலேயே பொழுதை போக்கினர். இதனிடையே 2010ம் ஆண்டு வெளியான இன்ஸ்டாகிராம் எனும் செயலி இளைஞர்களை தன்வசம் இழுத்தது. இதனால், கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கி சில மாற்றங்களை செய்தது. இதன்மூலம், இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதில், போட்டோ, வீடியோக்கள் பகிர்வதற்காக இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் போட்டோக்கள் எடுப்பதற்கு இதில் பல ஃபில்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியட்நாம் நாட்டின் ஹானோய் பகுதியில் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவிடும் புகைப்படங்களுக்கு எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது. புகைப்படம் எடுக்கும் போது கையை எப்படி வைக்க வேண்டும், முகத்தை எப்படி திருப்ப வேண்டும் என்பது உட்பட நுணுக்கமான பலவற்றை அந்த மையத்தில் உள்ள பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். பலரும் ஆர்வமாக இந்த பயிற்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.







