முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

ஒரு ஓட்டில் ஆஸ்கரை தவறவிட்ட இந்திய திரைப்படம் எது தெரியுமா?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

அறிவியல் உலகிற்கு நோபல் பரிசு என்றால் சினிமா உலகிற்கு ஆஸ்கர் விருது என வர்ணிக்கும் அளவிற்கு உலக சினிமாவின் உச்சபட்ச கவுரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.  அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இரண்டு இந்திய படைப்புகள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன. இந்த நேரத்தில் ஆஸ்கர் விருதின் வரலாறு, தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்டவை குறித்து பார்ப்போம். 

இத்தாலிய மொழியில் ஆஸ்கர் என்ற சொல்லுக்கு அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் உயரிய விருது என்றுதான் அர்த்தம். ஆனால் அந்த வார்த்தை பின்னர் சினிமா விருதோடு ஒன்றிப்போய்விட்டது. 1929ம்  ஆண்டு மே மாதம் 16ந்தேதி  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ”தி ஹாலிவுட் ரூஸ்வெல்ட்” ஹோட்டலில் இரவு விருந்துடன் சிறிய நிகழ்வாகத் தொடங்கிய ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று உலகமே உற்றுநோக்கும் பிரம்மாண்ட விழாவாக மாறியிருக்கிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்கிற அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எத்தனை பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள்

சிறந்த  நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை,  சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த அனிமேஷன் திரைப்படம், சிறந்த அனிமேஷன் குறும்படம், சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடை வடிவமைப்பு,  சிறந்த ஆவணத் திரைப்படம், சிறந்த ஆவண குறும்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த மேக்அப், சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல்,  சிறந்த ஒலித்தொகுப்பு. சிறந்த ஒலிக்கலவை, சிறந்த விசுவல் எபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்,  என 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வழங்குகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்.

விருதுக்குரியவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் சுமார் 9500 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தான் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலும், பின்னர் விருது பெறுபவர்களின் பட்டியலும் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்கர் விருது கமிட்டியில் உள்ள வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 10  ஆண்டுகளில் 65 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்களே அதிக அளவில் உள்ளார்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளார்கள் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை உறுப்பினராக இணைக்கும் வகையிலும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையிலும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது. கடந்த ஆண்டு  உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்கள் 397 பேர் இந்த அமைப்பில் புதிதாக இணைந்தனர். நடிகர் சூர்யா, இந்தி நடிகை கஜோல் உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்களும் இதில் அடங்கும். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ஏ.ஆர் ரகுமான், இந்தி திரையுலக நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமிர்கான், வித்யாபாலன் உள்ளிட்டோர்  ஏற்கனவே ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர்களாக உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில், டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது தேர்வுக்கு கடந்த ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆஸ்கர் விருதை அந்த படம் பெறவில்லை என்றாலும் ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்களிடையே பாராட்டுதலகளை பெற்றது. இந்நிலையில் சூர்யா ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராகியிருக்கிறார். தென் இந்தியாவில் ஆஸ்கர் விருது கமிட்டியில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகர் சூர்யாதான். சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கான இறுதித்தேர்வில் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு அவர் தனது வாக்கினை செலுத்தினார். ஆஸ்கர் விருது பெறுபவர்களின் பட்டியலை விழா நடைபெறுவதற்கு முதல் நாளே ஊடகங்களிடம் தெரிவிக்கும் வழக்கம் ஒரு காலத்தில்  இருந்தது. ஆனால் தற்போது மூடிய கவரில் இருக்கும் விருதாளர்கள் பெயர்கள் ஓட்டெடுப்பை நடத்தும் அமைப்பில் உள்ள ஒரு சிலரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. மேடையில் கவரை பிரிக்கும்போதுதான் அந்த பெயரை அறிவிக்கும் நபருக்கே விருதாளர் யார் என தெரியவரும். அந்தஅளவிற்கு  ரகசியம் காக்கப்படுகிறது.

ஆஸ்கர் விருதுபெற்ற இந்தியர்கள்

இதுவரை 8 இந்தியர்கள் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளனர். 1982ம் ஆண்டு வெளிவந்த காந்தியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான காந்தி திரைப்படத்தில் பணியாற்றியதற்காக பானு அதைய்யா சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை பெற்றார். ஆஸ்கர் விருதை பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் இதன்மூலம் அடைந்தார். அடுத்தாக 1992ம் ஆண்டு இந்திய திரையுலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான சத்யஜித்ரேவிற்கு  வாழ்நாள் சாதனைக்கான கவுரவ ஆஸ்கர் விருதை  ஆஸ்கர் அகடமி வழங்கியது.

2009ம் ஆண்டு வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த, பாடல் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் இரட்டை விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அந்த படத்தின் ஜெய் ஹோ பாடலை எழுதியதற்காக பிரபல பாடலாசிரியர் குல்சருக்கு ஆஸ்கர் விருதுகிடைத்தது.  ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக் கலவைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். இப்படி ஒரே படத்தில் 3 இந்தியர்கள் ஆஸ்கர் விருதினை பெற்றனர்.  இவை தவிர தொழில்நுட்ப பிரிவுக்கான ஆஸ்கர் விருதுகளை ராகுல் தாக்கர், கோட்டலங்கோ லியோன், விகாஸ்  சதயே ஆகிய மூன்று இந்தியர்கள் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நேரடி இந்திய திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெறுவது என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் இது நிறைவேறப்போவதில்லை. இந்த பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ஷெல்லோ ஷோ 2023ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் இதற்கு முன்பு இந்த இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றும் ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்தியப் படங்களும் இருக்கின்றன. 1957ம் ஆண்டு வெளிவந்த மதர் இந்தியா திரைப்படம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் விருதினை தவறவிட்டது. 1988ம் ஆண்டு வெளிவந்த சலாம் பாம்பே, 2001ம் ஆண்டு அமிர்கான் நடிப்பில் வெளியான லகான் ஆகிய இந்தி திரைப்படங்களும் இறுதிப்போட்டிவரை முன்னேறியும் ஆஸ்கர் விருதைப் பெற முடியவில்லை.

ஆஸ்கர் விருது பெற்ற ”நாட்டு நாட்டு” பாடல்

இந்த ஆண்டு 3 இந்திய படங்கள் மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ராஜமவுலி இயக்கத்தில் கடந்து ஆண்டு வெளிவந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் (சிறந்த பாடல்) பிரிவின் பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்று ஆஸ்கர் விருதினை எதிர்நோக்கி காத்திருந்தது. அந்த எதிர்பார்ப்பு ஈடேறி ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது நாட்டு நாட்டு பாடல்.  ஆஸ்கர் கமிட்டியில் அமோக வரவேற்புடன் விருதினை தட்டிச்சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது கீரவாணி இசையில், சந்திரபோஸ் எழுத்தில் உருவான நாட்டு நாட்டு பாடல்.

ஷானெக் சென் இயக்கிய ஆல் தேட் ப்ரீத்ஸ் சிறந்த ஆவணத் திரைப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலிலும், கார்த்திக்கி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண குறும்படத்திற்கான  பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தன. இதில் தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் வாழ்க்கையை ஆவணப் படமாக்கிய தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருதினைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்

EZHILARASAN D

IPL 2021; தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!

Jeba Arul Robinson

திடீரென கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்!

Web Editor