உலகெங்கிலும் ரசிகர்களை அள்ளிக் குவித்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ திரைப்படத் தொடரின் பத்தாம் பாகம் எப்படி இருக்கிறது என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வின் டீசல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ’ஃபாஸ்ட் எக்ஸ்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான 9 பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்ட நிலையில், இந்த பாகத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயின்களும் நடித்துள்ளனர். வின் டீசல் மற்றும் மறைந்த நடிகர் பால் வாக்கர் இருவரும் இணைந்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் முதல் 7 பாகங்களில் நடித்தனர். இதன் வரிசையில் 8-வது பாகமாக பேட் ஆப் தி பியூரியஸ் மற்றும் 9-வது பாகமாக தி பாஸ்ட் சகா என பால் வாக்கர் இல்லாமல் வெளியானது. தற்போது 10-வது பாகமாக இந்த ஃபாஸ்ட் எக்ஸ் படம் வெளியாகியுள்ளது.
10-ம் பாகத்தை இயக்க லூயிஸ் லெட்டரியருக்கு வாய்ப்பு கிடைத்தது. வொண்டர் உமனாக நடித்து பிரபலமான கால் கடோட், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்-ன் முந்தைய பாகங்களில் நடித்துள்ளார். அவர் இந்த பாகத்தில் மீண்டும் நடித்துள்ளார். கேப்டன் மார்வெல் பட நடிகை பிரை லார்சன், டாம் மனைவியாக பல பாகங்களில் நடித்துள்ள மிட்செல் ரோட்ரிகோஸ் என பல கதாநாயகிகளுடன் இந்த படம் வெளியாகியுள்ளது. மேலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஆக்வாமேன் படங்களில் நடித்த ஜேசன் மோமோவா தான் இந்த படத்தில் வில்லன். வின் டீசல் 10வது பாகத்திலும் தனது டாம் டொரேட்டோவாக தொடர்கிறார். அத்தனை பேருக்கும் இன்ட்ரோ ஷாட், ஆக்ஷன், சென்டிமென்ட், பேக்ஸ்டோரி, ஃபைனல் டச் கொடுத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை இயக்கியதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
தனது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த டாம் (வின் டீசல்) மற்றும் அவரது குடும்பத்தை பழிவாங்க, டான்டே (ஜேசன் மோமோவா) செய்யும் விபரீத செயல்களும் அதை முறியடித்து ஹீரோ டாம் மற்றும் அவரது குடும்பத்தினர் பிழைத்தார்களா? இல்லையா? என்பது தான் ஃபாஸ்ட் எக்ஸ் முதல் பாகத்தின் கதை.
வாடிகன் நகரத்தையே காலி செய்ய ஒரு பெரிய வெடிகுண்டை டான்டே ஏற்பாடு செய்கிறார். அதிலிருந்து அந்த நகரத்தை ஹீரோ டாம் தனது குடும்பத்தினரின் உதவியுடன் எப்படி முறியடிக்கிறார் என்கிற கதையை வழக்கம் போல கார் சேஸிங் ஆக்ஷன் சீன் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்.
விஎஃப்எக்ஸ் என்றே தெரியாத அளவுக்கு பல மிரட்டலான காட்சிகள், கிராவிட்டிக்கு சவால் விடும் சண்டைக் காட்சிகள், நடிகர்களின் மிரட்டலான நடிப்பு, நொடிக்கு நொடி மாறும் லொகேஷன் என இந்த படம் ஒரு திரை விருந்தாகவே அமைந்துள்ளது. புதிய நடிகர்களின் எண்ட்ரி மற்றும் முந்தைய பாகங்களில் இடம்பெற்ற கால் கடோட், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்ட நடிகர்களின் வருகை போன்றவை படத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.
இந்த படத்தின் மூலம் இதன் அடுத்த பாகத்திற்கு ஒரு அறிமுகத்தை அமைக்கும் பொறுப்பில் லூயிஸ் லெட்டரியர் உறுதியாக இருந்துள்ளார் என்பது இந்த படத்தின் இறுதிக்காட்சிகள் காட்டுகின்றன. இந்த படத்தை மட்டும் 3 பாகங்களாக எடுத்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ்-ஐ முடிவுக்கு கொண்டு வந்து விடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.







