என் வாழ்வில் இந்த நபர் வந்ததிலிருந்து வாழ்க்கை மாறிவிட்டது என கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது வழிகாட்டி குறித்து பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தனது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் அசத்தி வரும் நடராஜன் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், 2015-16 இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்காக முதல்முறையாக அறிமுகமானார். இதில் சிறப்பாக விளையாடிய அவர், டி.என்.பி.எல். தொடரிலும், ரஞ்சி கோப்பையிலும் அசத்தினார்.
இதன்மூலம் 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது துல்லியமான யார்கர் பந்து வீச்சு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை கவர்ந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு தேர்வானார்.
நடராஜனின் யாக்கர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வீரர்கள் திணறி வருவதால் கிரிக்கெட் வட்டாரத்தில் இவரை யாக்கர் ஸ்பெஷலிஸ்ட் என அழைப்பதுண்டு. கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் கஷ்ப்பட்டு விடா முயற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்து தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ளார்.
நடராஜன் வெறுமனே கிரிக்கெட் விளையாட்டோடு நிறுத்தி விடாமல் தன்னைப் போலவே கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் சாதிக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது சொந்த செலவில் கிரிக்கெட் மைதானம் மற்றும் கிரிக்கெட் அகாடமியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த மைதானத்தில், நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் தங்கக்கூடிய ஒரு மினி கேலரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜ் தனது வழிகாட்டி ஜெயபிரகாஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது..
மனிதர்களுக்குள் நாம் கடவுளை காண்கிறோம் என்பது உண்மை; என் வாழ்வில் இந்த நபர் வந்ததிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது. என்னை அடையாளம் கண்டு, என்னை வடிவமைத்து, என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என நடராஜன் தெரிவித்துள்ளார்.







