சேலம் மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில் சாக்கு மூட்டையில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் போலீசார் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் கிராமத்தில் சாக்கு மூட்டையில் வைத்து பாக்கெட்டுகளில் சாராய விற்பனை செய்துவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவர் சாக்கு முட்டையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும், சாராயம் விற்பனை செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை குடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நேற்று வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் சாராய விற்பனை செய்யப்படுவது போன்ற வீடியோ வெளியான நிலையில் தற்போது மீண்டும் சாராயம் விற்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.