ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு மோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பர்ஹானா. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கண்டிப்பான இஸ்லாமிய குடும்பத்தில் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார் பர்ஹானா ( ஐஸ்வர்யா ராஜேஷ்). செருப்பு கடை நடத்தி வரும் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததாலும் குடும்ப சூழல் காரணமாகவும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை. தனது தோழி மூலமாக கால் செண்டரில் அவருக்கு வேலை கிடைக்கும். ஒரு கட்டத்தில் தனது குழந்தையின் உடல் நிலை காரணமாகவும் மருத்துவ செலவினை ஈடுகட்டவும் அதிக வருமானம் கிடைக்கும் மற்றொரு டிபார்ட்மென்டிற்கு தனது வேலையை மாற்றி கொள்கிறார் பர்ஹானா. ஆனால் வேலையை மாற்றிய பிறகு தான் அதற்கு பின்னால் இருக்கும் பிரச்னையை புரிந்து கொள்கிறார் பர்ஹானா.
அது ஆண்களுடன் செக்ஸ் உரையாடல்கள் நடத்தும் கால் சென்டர் வேலை என்பதை புரிந்து கொள்ளும் பர்ஹானா எப்படியாவது இந்த வேலையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என நினைக்கிறார். இந்த சூழலில் பர்ஹானாவை புரிந்து கொள்ளும் வகையில் ஒரு நபர் அவரை தொடர்பு கொள்கிறார். பர்ஹானாவுக்கும் அவரை பிடிக்க அந்த உரையாடல் தொடர்கிறது. தனது வாழ்க்கை மாறிவிட்டது என நினைக்கும் போது ஒரு பெரிய பிரச்னையில் பர்ஹானா சிக்கி கொள்கிறார். அந்த பிரச்னையில் இருந்து பர்ஹானா எப்படி மீள்கிறார் என்பதே மீதி கதை.
பார்ஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இல்லை இல்லை பார்ஹானாவாகவே வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று தான் சொல்ல வேண்டும். காட்சிக்கு காட்சி அவரது நடிப்பு அசர வைக்கிறது. அம்மாவாக, மனைவியாக, சாதாரண பெண்ணாக ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக தடம் மாறும் போது ஏற்படும் குற்ற உணர்ச்சியை முகத்தில் காட்டுவதாகட்டும், கணவனிடமும் குடும்பத்திடமும் பயந்து நடுங்குவதாகட்டும் பின்னி எடுத்துள்ளார்.
சாதுவான கணவராக ஜித்தன் ரமேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். எந்த ஒரு அலட்டலும் இல்லாத எளிமையான கணவராக நடித்துள்ளார். குறிப்பாக மனைவி தடம் மாறுவதை தெரிந்த பிறகும் அவருக்கு எடுத்து சொல்லும் காட்சிகளில் நம்மை உணர்ச்சி வயப்பட்ட வைக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா மற்றும் அனு மோல் இருவரும் தங்களுக்கு கொடுத்த காதப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர்.
இந்த படத்தில் செல்வ ராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதை விட படத்திற்கு வலு சேர்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் அவரது நடிப்பு மெருகேறிக் கொண்டே உள்ளது. குறிப்பாக பர்ஹானாவை பற்றிய உண்மையை சொல்லும் காட்சிகளில் நம்மை அசர வைக்கிறார் செல்வராகவன்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பர்ஹானா படமும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என நினைத்த நிலையில் இயக்குநர் நெல்சன் ஒரு புதுமையான கதை களத்தினை தேர்வு செய்து மிக திறம்பட கையாண்டுள்ளார். குறிப்பாக திரைக்கதையை நகர்த்தி சென்ற விதம் நம்மை சீட்டின் நுனிக்கே நகர்த்தி செல்கிறார்.
ஒரு சிறிய தவறான தகவல் கூட மிகப்பெரிய கலவரமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சென்சிட்டிவான கதையை தேர்வு செய்து இயக்குநர் மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார். சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தலைப்பில் கொடுக்கப்பட்ட 56565 என்ற எண் எதற்கு என்பது படத்தை பார்த்தால் தான் புரியும். மொத்தத்தில் பர்ஹானா பெண்களுக்கான ஒரு எச்சரிக்கை திரைப்படம்.







