வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு…

நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஒரு சிலிண்டர் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிய நிலையில் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு மத்திய அரசின் பரிசாக கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு இது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் பரிசு என்றார்.

மேலும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக, 75 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.6 கோடி பயனாளர்கள் உள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு குறைக்கப்பட்டுள்ள ரூ.200 ரூபாயை மானியத் தொகையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. இதனால் தற்போது ரூ.1118க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை சுமார் ரூ.918 வரை குறையும் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.