செப்.2-ம் தேதி விண்ணில் பாயும் ’ஆதித்யா-L1’ விண்கலம்.. நேரில் காண வழிமுறைகள்..!

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ’இஸ்ரோ’ அனுப்பிய…

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ’இஸ்ரோ’ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலமானது, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதையடுத்து இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக ’ஆதித்யா எல்1’ திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும், இந்த ஆதித்யா எல்1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இது தான்.

’ஆதித்யா-L1’ விண்கலம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்றும், பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ’ஆதித்யா-L1’ விண்கலம் ஏவப்படும் என்றும் இஸ்ரோ நேற்று அறிவித்தது. இந்த விண்கலம் சுமார் 400 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அந்தப் பகுதியில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈா்ப்பு விசை நிலையாக இருக்கும். அதனால் அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புற பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்-1 மேற்கொள்ள உள்ளது.

அதன்படி இஸ்ரோவின் அதிகாரப்பூர்வத் தளமான https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு சென்று, ஆதார் கார்டு அல்லது அரசு அங்கீகரித்த இதர அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் Register பக்கத்தில் தேவையான தரவுகளை பதிவிட்டு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஒரு அனுமதிச்சீட்டில் 2 பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கு இன்று (ஆக.29) நண்பகல் 12 மணிக்கு மேல் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து நேரடியாக காணலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.