ஓசூர் சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் விழா – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஒசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் தேர்திருவிழா இன்று நடைபெற்றது.…

ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஷ்வரர் மரகதாம்பிகை உடனுறை கோயில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஒசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் தேர்திருவிழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா, ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

ஆண்டுதோறும் மாசி மாதம் நடைப்பெறும் திருவிழாவில் தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒசூர் மலைக்கோவில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் திருக்கோயில் தேர்திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஷ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. மரகதாம்பிகை அம்மன் ஒரு தேரிலும்,சந்திர சூடேஸ்வரர் ஒரு தேர் மற்றும் விநாயகர் ஒரு தேர் என மூன்று தேர்களில் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த தேர் திருவிழாவினை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரோகரா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்தனர் தேரானது நான்கு முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது.

தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை சாமியின் மீது எரிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.