டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் அருகே செயல்பட்டு வந்த ஆண்கள் தங்கும் விடுதி இன்று சுமார் 1.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடத்திற்குள் சுமார் 40 முதல் 50 பேர் இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுவதாக சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவ இடத்தில் எட்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், ஆம்புலன்ஸ் மற்றும் பிற அவசரகால சேவையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




