ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது.
ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. 2018-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஆடவர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2023 லீக் சுற்று போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் இன்று முதல் தொடங்குகிறது. இதில் மொத்தம் 44 போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் போட்டியில், இந்தியா ஸ்பெயின் அணியுடன் களம் காண்கிறது.
ஒட்டுமொத்தமாக 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள 4 அணிகளும், மூன்று அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
குரூப் A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் அணிகளும், குரூப் b பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா அணிகளும், குரூப் C பிரிவில் சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் D பிரிவில் இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
குரூப் c பிரிவில் இடம் பிடித்துள்ள சிலி நாட்டிற்கு இதுவே முதல் உலககோப்பை தொடர் ஆகும். மேலும் ஹாக்கி உலக கோப்பை வரலாற்றிலேயே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தான் அணி, இந்த முறை உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 11ம் தேதி இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு, ரூர்கேலாவில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக மதியம் ஒரு மணிக்கு அர்ஜென்டினா அணி தென் ஆப்பிரிக்காவையும், மதியம் மூன்று மணிக்கு ஆஸ்திரேலிய அணி பிரான்ஸ் அணியையும், மாலை ஐந்து மணிக்கு இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.









