உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டி ஒடிசாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஒடிசாவுக்கும், ஹாக்கி விளையாட்டிற்குமான உறவை குறித்து விரிவாகக் காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011 ஆண்டுகளில் உலகக்கோப்பை வென்றிருந்தாலும், கிரிக்கெட் மீதான இந்தியர்களின் தீராத தாகம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது அனைவரின் கவனமும் சூழ்ந்திருக்கும் அதே வேளையில், இன்னொரு பக்கம் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலக கோப்பை தொடர் குறித்து எங்கேயாவது பேசுகிறோமா என கேட்டால் அதற்கான பதில் இல்லை என்பதுதான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி தொடர், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த முறை புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளோடு நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தொடர், புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
2018 ஆம் ஆண்டு முதல் தேசிய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்யும் ஒடிசா, 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி தொடரை நடத்தி முடிக்க 66 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது. ஆனால், தற்போதைய உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாயை செலவு செய்ய இருப்பது இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையையுமே ஒடிசாவின் மீது திரும்பச் செய்கிறது.
இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உலக கோப்பை தொடரை நடத்த திட்டமிட்ட ஒடிசா அரசு, விஸ்வரூப வளர்ச்சியாக 15 மாதங்களிலேயே இதனை செய்து முடித்துள்ளது. கடந்த முறை புகழ் பெற்ற புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடர், இந்த முறை ரூர்கேலா நகரில் 875 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தில் 20,000 ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெறவுள்ளது.
குறிப்பாக 225 தங்கும் அறைகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ரூர்கேலா மைதானமானது உலகத் தரமிக்க வசதிகள் கொண்ட நீச்சல் குளங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது என்பதை தாண்டி, ஒடிசா உலக கோப்பை தொடரை நடத்துகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கோப்பையில் இருந்து, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் குடை வரை ஒடிசாவின் பிரான்டிங்கை, உலக தரத்தில் ஏற்பாடு செய்திருக்கிறது அம்மாநில அரசு.
இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை பேணி காக்கும் வகையில் பல கலாச்சார கட்டமைப்புகளையும், அடையாளங்களையும் கொண்டுள்ள ஒடிசா, உலகக்கோப்பை தொடருக்காகவே ஒவ்வொரு நகரங்களின் சாலை கட்டமைப்புகள் முதல், சுற்றுலா தளங்களின் மேம்பாடு என அனைத்தையும் கண்ணும் கருத்துமாக சீரமைத்துள்ளது.
பொதுவாகவே ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் 20 முதல் 30 ஹாக்கி மைதானங்கள் கட்டமைக்கப்பட்டு, அந்நாட்டு இளைஞர்களிடையே ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டி வரும் நிலையில், இந்தியாவிலும் அதே போல ஒரு சூழலை உருவாக்கி, ஹாக்கி விளையாட்டை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற ஒடிசாவின் முயற்சி இந்தியாவுக்கு மீண்டும் வெளிச்சத்தை கொடுத்துள்ளது.
1928 முதல் 1980 வரையிலான இடைப்பட்ட காலக்கட்டத்தில், ஹாக்கியில் இந்தியாவின் வளர்ச்சி என்பது பல்வேறு நாடுகளுக்கு உதாரணமாக விளங்கியது. உலகக் கோப்பை தொடர்களில் ஒரு முறை சாம்பியன் பட்டம், ஒரு முறை வெள்ளி, ஒரு முறை வெண்கலமும், ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை சாம்பியன் பட்டமும், இரண்டு முறை மூன்றாம் இடம் பிடித்த இந்தியா, 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில் இருந்தது.
ஒரு விளையாட்டு பிரபலமடைய வேண்டும் என்றால், அந்த விளையாட்டிற்கான ஆதரவை பெருக்குவதற்கு, தனியார் நிறுவனங்களின் முதலீடும், பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் தேவைப்படும் பட்சத்தில், இந்திய ஹாக்கி அணிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்பான்ஸராக உருவெடுத்தது ஒடிசா மாநிலம்.
அதற்கு பலனாக, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. எனவே தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி, இந்தியாவின் விளையாட்டு நகரமாக உருவெடுத்து வரும் ஒடிசா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தி முடித்தது. தற்போது அந்த வரிசையில் மிக பிரம்மாண்டமாக ஹாக்கி உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது ஒடிசா.
ஒரு நாட்டில் விளையாட்டுத் துறை வளர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த நாட்டில் இளைஞர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும். அந்த வகையில் ஒடிசா இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் வருங்கால ஒலிம்பிக் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஒடிசா அரசு ஒருபடி முன்னே இருக்கிறது என்றால் யாரும் மறுப்பதற்கில்லை.
– நந்தா நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்.