முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் & சட்டங்கள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேரவையில் கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களையும், சட்டங்களையும் விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு. அண்ணா மறைவுக்குப் பிறகு, 1969-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி,…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேரவையில் கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களையும், சட்டங்களையும் விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

அண்ணா மறைவுக்குப் பிறகு, 1969-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 1970-ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கு மே தினத்தைக் கட்டாய விடுமுறையாக்குவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார். 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி, இந்து மதத்தின் அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அடுத்த நாளே, மாநில சுயாட்சி குறித்த மாநில அரசின் கருத்துக்களையும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்றுத் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் விவாதத்திற்குப் பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (1974) தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் ஒன்றையும் கருணாநிதி கொண்டு வந்தார். 1989-ஆம் ஆண்டு பெண்களுக்குச் சமத்துவம் அளிக்கும் வகையில் இந்து குடும்பத்தில் பிறந்த மகளிருக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வழி வகை செய்யும் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அதே ஆண்டில், ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளில் 30% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக் கருணாநிதி கொண்டு வந்தார்.

1996-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் மேலவையை தோற்றுவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1997-ஆம் ஆண்டில் உயர்கல்வி நிலையங்களில் புதியதாய் சேரும் மாணவர்களை ஏற்கனவே உள்ள மாணவர்கள் கேலி வதை என்ற பெயரால் துன்புறுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. அதே ஆண்டின், ஏப்ரல் மாதத்தில் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக அமையும் வகையில் பொதுமக்கள் தகவல்களைக் கேட்டுப் பெற “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” கொண்டு வரப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘மகளிர் போற்றும் மகத்தான தலைவர்!’

1998-ஆம் ஆண்டு பெண்களிடம் குறும்பு, கேலி செய்வதைத் தடுக்கும் வகையில் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். 2006-ஆம் ஆண்டு காமராஜர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வழிவகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் மாநில ஆட்சி மொழியான தமிழை அறிமுகப்படுத்தக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொள்ளும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2008-ஆம் ஆண்டு தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில் சட்டம் ஒன்றைக் கருணாநிதி கொண்டு வந்தார். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நான்கு வகையான பள்ளிக்கல்வி முறைகள் இருந்த வந்த நிலையில் அதில் உள்ள வேறுபாடுகளைக் களையத் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வித்துறை சட்டத்தைக் கொண்டு வந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.