ஏன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கங்களை தேடுகிறீர்கள்? என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேள்வி எழுப்பினார்.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராம ஜென்மபூமி இயக்கத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் எந்த போராட்டத்தையும் நடத்த ஆர்வம் காட்டவில்லை என்றும், ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதர் கோவில் பிரச்சனையில் சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் வளமான பகுதிகளை ஆட்சி செய்வதற்காக இந்தியா மீது முகலாயர்கள் படையெடுத்து இந்திய நிலப்பகுதிகளை ஆக்கிரமித்தனர். அவ்வாறு இந்தியாவிற்குள் வந்த, முகலாயர்களிடமிருந்து சுதந்திரம் தேடும் மக்களின் மன உறுதியைக் குலைக்க ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. இவற்றில் இந்துக்களால் போற்றப்படும் கோவில்களும் அடங்கும். இதுதொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும், இந்த வழிபாட்டுத் தலங்கள் புத்துயிர் பெற வேண்டும் என்று முன்னோர்கள் நினைக்கிறார்கள் என்று கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் ஞானவாபி மசூதி வழக்கு குறித்து கருத்து தெரிவித்த பாகவத், வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது. கடந்த காலத்தை இன்றைய இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் உருவாக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு நாளும் மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேடுவது ஏன்? எதற்காக சண்டையை அதிகரிக்க வேண்டும்? நாம் ஒரே மூதாதையரின் சந்ததியினர் என்பதால் இந்தியா ஒரே வழிபாட்டையும் ஒரே மொழியையும் நம்பவில்லை, ” என்று கூறினார்.
எப்போது மக்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார்களோ, அப்போது அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். நமது நீதித்துறையின் முடிவுகளை நாம் புனிதமானதாகவும், உன்னதமானதாகவும் கருதி, அவற்றைக் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.








