கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்: இந்திய தூதரகம் கண்டம்

கனடாவில் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கி வரும் இந்து கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தியதற்காக டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கௌவுரி சங்கர்…

கனடாவில் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கி வரும் இந்து கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தியதற்காக டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கௌவுரி சங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் ஒன்று உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படும் இந்த கோவிலை மர்மகும்பல் ஒன்று சேதப்படுத்திய சம்பவம் அங்கு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை சீக்கிய பிரிவினைவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுரிசங்கர் மந்திர் கோவிலை இழிவுபடுத்தியது கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர். இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது . இதுதொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலிற்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன் ஆச்சார்யா, பிரம்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர் சிதைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, கனடாவில் உள்ள கோவில்கள் மீதான தாக்குதல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுமாதிரியான நாசா வேளைகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) மற்றும் காலிஸ்தானி குழுக்கள் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கௌரி சங்கர் மந்திர் கோவிலை இழிவுபடுத்தும் வீடியோவும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலை இழிவுபடுத்தியது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இதுவரை 3 முறை கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பிராம்ப்டனில் கௌவுரி சங்கர் மந்திர் என்ற இந்து கோவிலும் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நடத்தப்படும் செயலாகவும், அவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தமாகவும் இருக்குமோ என்று கூறப்படுகிறது. அதேபோல் சிறுபான்மை சமூகங்களை பலிகடாவாக சித்தரித்து இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு அமைப்பினரிடையே பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

கடந்த செப்டம்பரில், இந்திய வெளியுறவு அமைச்சகம், கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் பிற இந்தியா விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறி, கடுமையான வார்த்தைகளைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கனேடிய அரசை இந்தியா வலியுறுத்தி இருந்தது.

2019 மற்றும் 2021 க்கு இடையில் கனடாவில் மதம், இனம் மற்றும் பாலியல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட வெறுப்புக் குற்றங்களில் 72 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா நாட்டின் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை சமூகத்தினரிடையே அச்சத்தை அதிகரிக்க வழிவகுத்தது. குறிப்பாக கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகைக் குழுவான இந்திய சமூகம், கிட்டத்தட்ட நான்கு சதவீத மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து கனடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வாரங்களுக்குள், மூன்று இந்து கோவில்கள் அதாவது ஆல்பர்ட் பூங்காவில் உள்ள இஸ்கான் கோவில், கேரம் டவுனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவ விஷ்ணு கோவில் மற்றும் மில் பூங்காவில் உள்ள சுவாமிநாராயண் மந்திர் ஆகிய கோவில்கள் காலிஸ்தானி ஆதரவாளர்களால் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.