சுய விளம்பரத்துக்காக தனது வீட்டு வாசலில் தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (40). இந்து முன்னணி அமைப்பில் நகர தலைவராக உள்ள சக்கரபாணிக்கு மாலதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சக்கரபாணி, தான் வழக்கம் போல் காலை வீட்டின் கதவை திறந்து வந்து பார்த்த போது வாசலில் பெட்ரோல் வாசனையும் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதாகவும் தெரிவித்தார். மர்மநபர்கள் தன்னை கொலை செய்வதற்காக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சாமி நாதன், ஜெயசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் மோப்பநாயை அழைத்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் புகார் தெரிவித்த சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவருடைய மனைவி மற்றும் மகன்களிடமும் போலீசார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை
மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தன்னை பற்றி பேச வேண்டும் என்பதற்காக சுய விளம்பரத்திற்காக தனது வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் விசியதாக நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது. பாட்டில் மற்றும் எரிந்த திரியின் துணி அவரது வீட்டின் போர்வையில் இருந்து கிழிக்கப்பட்டதும் கண்டுபிடித்தனர் போலீசார். இதனையடுத்து காவல்துறையினர் சக்கரபாணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் மீது தானே பெட்ரோல்
குண்டு வீசி இந்து முன்னணி பிரமுகரின் செயல் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







