இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கிற்கு உடல்நலக்குறைவு – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், ஷிம்லாவில் இருந்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை…

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், ஷிம்லாவில் இருந்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் “இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இன்று காலை 11.20 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, இரைப்பை குடலியல்துறை (Gastroenterology) மருத்துவப் பேராசிரியர் பிரமோத் கர்க் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். லேசான கணைய அழற்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஆரோக்கியமாக உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுக்விந்தர் சிங் சுகு, ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகள் அனைத்தும் அவர் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தின என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“கடந்த சில நாட்களாக அவர் தொடர் சுற்றுப் பயணத்தில் இருந்ததால், வெளியிடங்களில் அவர் சாப்பிட்டுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட உணவு காரணமாக அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். எனினும், இரண்டாவது கருத்தை அறியும் நோக்கிலேயே அவர் எய்ம்ஸ் சென்றுள்ளார்” என இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ராகுல் ராவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.