கோடையில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும்  மூலிகைகள்!

கோடையில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும்  மூலிகைகளை பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால், …

கோடையில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும்  மூலிகைகளை பற்றி பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.

கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.   அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அதே நேரத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும்  மூலிகைகளை பற்றி பார்க்கலாம்.

கற்றாழை

கற்றாழை உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை எரிச்சல் மிகுந்த சருமத்திற்கு நிவாரணம் அளிக்கிறது.  கற்றாழை ஜூஸை குடித்து வருவது செரிமானத்தை மேம்படுத்தி நச்சுக்களை நீக்கும்.  மேலும் இது கோடை வெப்பத்தை எதிர்த்து போராட உதவுகிறது. சிலர் இதனை மோரில் சேர்த்து அருந்துவதும் உண்டு.

புதினா

புதினாவில் குளிரூட்டும் பண்புகள் உள்ளது.  புதினாவை தினமும் எடுத்து கொள்வதன் மூலம் இந்த கோடையில் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளலாம்.  இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.  புதினா செரிமானத்திற்கு உதவி,  குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  புதினா இலைகளை தண்ணீரில் போட்டு குடித்து வரலாம்.  எலுமிச்சைப் பழச்சாறு போன்ற குளிர் பானங்களில் புதினா இலையை போட்டு குடிக்கலாம்.

இஞ்சி

இஞ்சி வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.   மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இஞ்சி கோடையில் உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

துளசி

துளசி இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளுக்கு நிவாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.   இது தவிர துளசி கோடை வெப்பத்தை எதிர்த்து போராட உதவுகிறது.  இதன் தெரபியூடிக் கூலிங்,  டீடாக்ஸிஃபையிங் மற்றும் சுத்தப்படுத்தும் பண்புகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.  இதனால் உடல் வெப்பத்தை தணிக்க தினமும் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம்.

கொத்தமல்லி

கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை போக்க கொத்தமல்லி உதவுகிறது.  மேலும் உடலை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.   இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன.  கொத்தமல்லி இலைகளை சட்னி செய்து சாப்பிடலாம்.  மேலும் பல முறையிலும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.