கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ் பேர்-2022” கண்காட்சிக்குப் பிறகு, எஸ்பி வேலுமணி தலைமையிலான சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு ஒன்றை அளித்தனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ் பேர்-2022” கண்காட்சியில் மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் நேற்று பங்கேற்றனர். தொடர்ந்து கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஏற்றுமதியில் மேக் இன் இந்தியா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோருக்கு வேலை வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் தொழில் துறையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். சர்வதேச தலைவர்களுடன் பிரதமரின் நட்புறவு காரணமாக வர்த்தகம் எளிதாகியுள்ளது. பருத்தி குறைந்த விலையில் கிடைப்பதற்கான நடவடிக் கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் என் டி சி ஆலைகள் லாபகரமாக இயங்காததே தொடர்ந்து செயல்படாததற்குக் காரணமாக உள்ளது என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, எஸ்பி வேலுமணி தலைமையிலான சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், பருத்தி விலை உயர்வு காரணமாக நூற்பாலைகளில் தொழிலாளர்கள், கைத்தறி நெசவு மற்றும் விசைத்தறிகள், பின்னலாடை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொழில்துறை வளர்ச்சியில் ஆபத்து உள்ளது எனவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், ஜவுளித் தொழிலில் வட இந்தியர்கள் அதிக அளவு பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு வாடகை அடிப்படையில் தற்காலிக தங்குமிடம் அல்லது நிரந்தர குடியிருப்பு வழங்க உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
https://twitter.com/news7tamil/status/1540714525430648832
திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் நலன் கருதி இஎஸ்ஐ மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி வழங்க வேண்டும். தற்போது என்டிசி தொழிற்சாலைகள் வியாபாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள நிலையில் அந்த ஆடைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் சைனா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பருத்தி உற்பத்தி தரமற்றதாக உள்ளது. ஆகவே வேளாண்மை பல்கலை மூலம் விதை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும் எனச் சொல்லப்பட்டிருந்தது.
ஜவுளி சந்தை தற்போது அகமதாபாத்தில் மட்டுமே உள்ள நிலையில் சோமனூர் அல்லது பல்லடம் அல்லது காரணம்பேட்டை பகுதியில் ஜவுளி சந்தை அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு மானியம் வழங்க வேண்டும், கோவை சக்தி சாலையில் உள்ள கணபதி எப்சிஐ சாலை மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் அதனைப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.








