நியூயார்க்கின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

நியூயார்க்கின் ஹட்சன் நதியில் பயணிகள் ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹட்சன் நதி அமைந்துள்ளது. மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் (Hudson River) விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக நியூயார்க் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் அடங்குவர். இது குறித்து தகவலறிந்த நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்புபணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விமானம் விபத்திற்குள்ளாவதற்கு முன் சுமார் 15 நிமிடங்கள் பறந்ததாக விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

இதற்கிடையில், நியூயார்க் நகர காவல் துறை (NYPD) விபத்தைத் தொடர்ந்து ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, அதன்படி, “வெஸ்ட் சைட் நெடுஞ்சாலை மற்றும் ஸ்பிரிங் தெரு அருகே ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால், சுற்றியுள்ள பகுதிகளில் அவசர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.