நீலகிரியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்சம் வெப்பநிலை 2.8 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று
அதிகாலை கடும் உறை பனிப்பொழிவு காணப்பட்டது. உதகையில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் கடந்த
இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்நிலையில் உதகையில் நேற்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. கடும் உரைபனி காரணமாக இன்று, அவலாஞ்சி
உள்ளிட்ட பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியசும், உதகையில் 2.8 டிகிரி செல்சியஸ்
பதிவாகியுள்ளது.
உதகையில் இன்று அதிகாலை நிலவிய கடும் உறை பனி பொழிவின் காரணமாக உதகை குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, எச்.பி.எஃப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பச்சை புல்வெளிகளில் உறை பனி பொழிவு ஏற்பட்டு வெள்ளை பட்டு கம்பளம் போல் காட்சி அளித்தது. மேலும் காந்தாள், தலை குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான நீர் நிலைகளின் அருகே உறைபனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை 4 மணி முதல் அதிகாலை 9 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மற்றும் உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் தீமூட்டி குளிரை சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் நிலவும் உறைபனி பொழிவின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.







