சென்னை, புறநகரில் கொட்டிய கனமழை – கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

கனமழை காரணமாக ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னையின் பல்வேறு…

கனமழை காரணமாக ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கிண்டி கத்திப்பாரா சப்வேயில் மழைநீரானது சூழ்ந்துள்ளது. சுரங்கப்பாதையில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால் கார், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கத்திரபாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆலந்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வரை வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு வாகனங்களை ஓட்டுகின்றனர். அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.