#Chennai மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை – அதிகபட்சமாக புழல் பகுதியில் 17.9 செ.மீ மழை பதிவு!

நேற்று (அக். 15) காலை 8:30 மணி முதல் இன்று காலை 5:30 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக புழல் பகுதியில் 179 மிமீ மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…

Heavy rains in #Chennai and suburbs - maximum 17.9 cm rain recorded in Puzhal area!

நேற்று (அக். 15) காலை 8:30 மணி முதல் இன்று காலை 5:30 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக புழல் பகுதியில் 179 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (அக். 15) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று (அக். 16) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று பெய்த கனமைழையால் சாலைகளிலும், சில வீடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதற்கிடையே சாலைகளில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளிலும், மீட்புபணிகளிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று (அக். 15) காலை 8:30 மணி முதல் இன்று காலை 5:30 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 139 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 116.4 மில்லி மீட்டர், எண்ணூர் பகுதியில் 165 மில்லி மீட்டர், புழல் பகுதியில் 179 மில்லி மீட்டர், வில்லிவாக்கம் பகுதியில் 160.5 மில்லி மீட்டர், நந்தனா பகுதியில் 134 மில்லி மீட்டர், காஞ்சிபுரத்தில் 164.5 மில்லி மீட்டர், கடலூரில் 36 மில்லி மீட்டர், திருப்பத்தூரில் 28 மில்லி மீட்டரும், காரைக்காலில் 0.2 மில்லி மீட்டர் என்ற அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.