வடமாநிலங்களில் தொடரும் கனமழை; பஞ்சாபில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளி விடுமுறையை ஜூலை 16 வரை நீட்டித்து பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளி விடுமுறையை ஜூலை 16 வரை நீட்டித்து பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

குறிப்பாக பஞ்சாபின் பல மாவட்டங்களில் மழையினால் மக்களின் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. 14 மாவட்டங்களில் உள்ள 1058 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் நிலைமை மோசமாகி வருவதைக் கண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட பஞ்சாப் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநிலத்தில் ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து பள்ளிகளும் ஜூலை 16-ம் தேதி வரை மூடப்படும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பள்ளிகள் ஜூலை 17-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லியிலும் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.