முக்கியச் செய்திகள்

கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்

கன மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 242.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 94 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 5.48 மி.மீ. ஆகும். ஆகஸ்ட் 3ஆம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆகஸ்ட் 4, 5 ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவின்பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்; ஆயிரம் கோடி வசூல் உறுதி?

Vel Prasanth

மத்திய அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி தொகை வழங்கப்படும் – அமைச்சர் கயல்விழி

Gayathri Venkatesan

’ஆர்யன் வர்ற வரைக்கும் வீட்ல ஸ்வீட் கிடையாது’: ஷாருக் மனைவி உத்தரவு

G SaravanaKumar