கனமழை எதிரொலி; வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. …

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டது.

இது நேற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் படிப்படியாக ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற்று வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைந்துள்ளது. இது புயலாக உருமாறியுள்ள நிலையில், நாளை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு, ‘மாண்டஸ் புயல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஏற்கனவே தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலும், கனமழை காரணமாக, இன்று பிற்பகல் 3 மணி முதல், நாளை (09.12.2022) வரை, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.