குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ச்சியாக 7வது முறையாக வெற்றி பெற்றபோதிலும் அந்த வெற்றி இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மிகப் பெரிய சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.
பொதுவாக ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக 2 முறை ஒரு கட்சி ஆட்சியில் இருந்தாலே ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை குறித்து அதிகம் பேசப்படும். குஜராத்தில் பாஜக தொடர்ச்சியாக சுமார் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இந்த முறை கடுமையாக எதிரொலிக்கும் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 100க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றே பாஜக ஆட்சியை பிடித்ததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இருந்ததற்கான சுவடே தெரியாத அளவிற்கு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அங்கு மோடி அலை ஓயவில்லை பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் 150க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் காலை 11 மணி நிலவரப்படி சுமார் 85 சதவீத இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பாஜக அடைய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் தாண்டு அளவிற்கு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து வருகிறது.
இதற்கு முந்தைய பிரம்மாண்ட வெற்றிகள்
சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவதை சிக்கிமில் 1989 மற்றம் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தம் உள்ள 32 இடங்களையும் கைப்பற்றி சிக்கிம் ஜனநாயக முன்னணி 100 சதவீத வெற்றியை பெற்றது. 1989ம் ஆண்டு தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளையும், 2009ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 65.9 சதவீத வாக்குகளையும் சிக்கிம் ஜனநாயக முன்னணி பெற்றது.
அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சாதனையும் சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியால்தான் நிகழ்த்தப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 32 இடங்களில் 31 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. அதாவது 96.9 சதவீத வெற்றியை அக்கட்சி பெற்றது.
அதிக இடங்களை வென்ற சாதனை பட்டியலில் 3வது இடத்தில் ஆம் ஆத்மி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று 95.7 சதவீத வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது.
1985 ஆண்டு சிக்கிமில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 32 இடங்களில் 30 இடங்களில் சிக்கிம் சங்கராம் பரிஷத் வென்றது. இது 93.8சதவீத வெற்றியாகும்.
இந்த சாதனை பட்டியலில் 5வது இடத்தை ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி பிடித்துள்ளது. அக்கட்சி ஜம்மு காஷ்மீரில் கடந்த 1962ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 75 இடங்களில் 70 இடங்களில் வென்று 93.3 சதவீத வெற்றியை பதிவு செய்தது.
உத்தரபிரதேசத்தில் 1951ம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 430 இடங்களில் 388 இடங்களைக் கைப்பற்றி 90.2 சதவீத வெற்றியை பெற்றது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 225 இடங்களில் வென்றது. இது 96.15 சதவீத வெற்றியாகும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 7 இடங்களையே பெற்றது.
1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 221 இடங்களில் வெற்றி பெற்றது. இது 94.4 சதவீத வெற்றியாகும். இந்த தேர்தலில் அதிமுக 4 இடங்களிலேயே வென்றது. பர்கூர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவே தோல்வி அடைந்தார்.
குஜராத் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் அம்மாநிலத்தில் பாஜக நிகழ்த்தப்போகும் சாதனை இந்த பட்டியலில் எந்த இடத்தில் இடம்பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-எஸ்.இலட்சுமணன்