தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள கோடநாடு காட்சி முனையில் உள்ள மலை முகடுகள் நடுவில் உருவாகும் அடர்ந்த வெண்படலம் சூழ்ந்த மேகமூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்தனர்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த
சுற்றுலாத் தளம் ஆகும். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள
மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கோடநாடு காட்சி முனை அமைந்துள்ளது.
இந்த காட்சி முனையைக் கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா
உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.
இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என
காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும்
பழங்குடியினரின் தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
அதேபோல, கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்திருந்தனர். இந்நிலையில், கோடநாடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக
குளுகுளு காலநிலை நிலவியது. அப்போது, தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவில் உருவான அடர்ந்த வெண் படலம் சூழ்ந்த அடர்ந்த மேகமூட்டங்கள் மலைகளின் மீது தவழ்ந்து செல்வதை சுற்றுலாப் பயணிகள் மெய்மறந்து வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இதுக்குறித்து, கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், கோடநாடு காட்சி
முனையில் நிலவும் கடும் குளிருடன் அடர்ந்த மேகமூட்டங்களை மிக அருகில் கண்டு
ரசித்தது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
-ம.பவித்ரா








