பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப் பிரிவினருக்கான…

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தார்.

அந்த வகையில் இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. நான்கு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும், தங்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்த பின் ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை கல்லூரிகளில் செலுத்திவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட் – ஆப் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். 332 அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், வரும் 22-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.