கொரோனா தடுப்பூசி குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதி வழங்கியது. முறையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படாத நிலையில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இருந்தாலும் ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பித்தது. முதற்கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தடுப்பூசியால் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என சுட்டிக்காட்டினார். எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதனை செலுத்திய பிறகு தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் பக்க விளைவுகளை காணலாம், அது அனைத்து தடுப்பூசிகளிலும் பொதுவானது என்று ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
துரதிருஷ்டவசமாக அரசியல் காரணங்களுக்காக சிலர் தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என குற்றம்சாட்டியதோடு, இதனால் ஒரு சிறு மக்கள் குழுவினர் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் குறிப்பிட்டார் ஹர்ஷவர்தன்.







