முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது: தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை?

நாளை நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.


காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இணைய வழியாக நாளை கூடுகிறது. அதில், மிக முக்கியமாக உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.


முன்னதாக சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதிய கடிதம் விவாதங்களை உண்டாக்கியது. தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை அடுத்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், முழு நேர தலைவரை நியமிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.


இதனையடுத்து, உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்காக மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் சோனியா காந்தி. இந்தக் குழுவானது தற்காலிக தேர்தல் அட்டவணை தயாரித்து, காரியக் கமிட்டியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. நாளை நடைபெறும் கூட்டத்தில் தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதுபோலவே புதிய காங்கிரஸ் தலைவர் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதனால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். மீண்டும் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வலியுறுத்தப்பட்டபோதிலும் அவர் மறுத்துவிட்டார்.


இந்த நிலையில் நாளை நடைபெறும் காரியக் கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்தலுக்கான சில பரிந்துரைகளையும் மதுசூதனன் மிஸ்திரி அளிக்க இருப்பதாகவும், தேர்தல் தேதியும் முடிவெடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Related posts

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

Ezhilarasan

சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனைச் செய்தவர் கைது

Jeba Arul Robinson

பாஜக இந்துத்துவ கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது : விஜய் வசந்த்!

Halley karthi

Leave a Reply