இந்தியா முழுவதும் முதல் நாளன்று 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலில், முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுகாதாரப்பணியாளர்கள்,முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 181பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணியில் நாடு முழுவதும் 16 ஆயிரத்து 755 பேர் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்டதால் பாதிக்கப்பட்டதாகவோ, பாதிக்கப்பட்டநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







