“என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்” – அண்ணமலைக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என அண்ணமலைக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜுனாவை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர்  ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ஆதவ் அர்ஜூனா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் மீதான ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு அவரின் மைத்துனர் (மாமனார் மகன்) ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மன்னிப்பு கோரியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  “தமிழ்நாடு  மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு  எனது எதிர்ப்பையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன்.   ‘அவர் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்’  என்று அண்ணாமலை பேசியதை ஆதரிக்கிறேன்.

பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்து தனது அரசியலை வைத்து பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள,  பல கட்சிகளில் இணைந்து வருகிறார். அவர் செய்யும் முட்டாள்தனத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில் நீதிமன்றத்தை  நாடி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்”  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.