சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 52 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எழும்பூர் ரயில்வே பறக்கும் படை போலீசார் இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையில் நேற்று ரயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர். அப்போது காக்கிநாடாவில் இருந்து சென்னை வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சந்தேக நபரின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் ரூ. 52 லட்சம் கணக்கில் வராத பணம் இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் வெங்கட தினேஷ் குமார் (36) என்பது தெரியவந்தது.
அவர் வைத்திருந்த பணத்துக்கு சரியான ஆவணங்களை அவர் காட்டாததால் அந்த பணத்தை ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்தப்பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







