காங்கிரஸ் கட்சி தன்னை புறக்கணித்ததன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் பட்டிதார் சமூக தலைவரான ஹர்திக் படேல், கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திடீரென அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று வெளியேறினார்.
இதனையடுத்து குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்திக் படேல், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை, கடந்த 33 ஆண்டுகளாகவே 7 அல்லது 8 பேர்தான் நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மக்களின் உண்மையான பிரச்னையை கவனிக்கவும், அதற்கு தீர்வு காணவும் இவர்கள் முன்வருவதில்லை என குற்றம் சாட்டிய ஹர்திக் படேல், உண்மையை பேசவும், வெற்றிக்கான வியூகத்தை வகுக்கவும் தவறி வருவதாகவும் கூறினார்.
டெல்லியில் இருந்து வரும் தலைவர்களுக்கு சிறப்பாக விருந்தளித்து அவர்களை திருப்திப்படுத்துவது மட்டுமே குஜராத்தில் இருக்கக் கூடிய காங்கிரஸ் தலைவர்களின் ஒரே வியூகமாக உள்ளது எனவும் ஹர்திக் படேல் விமர்சித்தார்.
குஜராத்தின் உண்மையான பிரச்னைகளைப் பேசுபவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்து அவர்களின் அரசியல் எதிர்காலத்தை இவர்கள் பாழ்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து, குஜராத்தின் பிரச்னைகள் குறித்து விளக்கியதாகத் தெரிவித்த ஹர்திக் படேல், அதன் பிறகு மாநிலத்தில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்களால் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாகவும் எனவேதான், அக்கட்சியில் இருந்து விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வேதனையோடு அல்லாமல் மிகுந்த உறுதியுடன் அக்கட்சியில் இருந்து தான் விலகி இருப்பதாகவும் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.








