ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்யக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேசை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடையாத நிலையில், ஜூன் மாதம் 10 முதல் 12 ஆம் தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனால் பள்ளிகள் திறப்பதை சற்று தாமதப்படுத்தி ஜூன் 20 அல்லது 27-ம்தேதி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, பள்ளிகள் திறப்பை தாமதம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 13-ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் ஏற்கனவே 13-ஆம் தேதி முதல் விடுப்பு அளிக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடுகளில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கநிலை ஆசிரியர்களும் 20-ம் தேதி முதல் விடுப்பில் செல்ல இருக்கின்றனர். அரசு இதனை மனதில் வைத்து 1 முதல் 9;வகுப்புகளை 13-ஆம் தேதி முதல் அதாவது ஜூன் மாதம் திறப்பது மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
உயர் வகுப்புகளை அரசு அறிவித்துள்ளபடி ஜூன் 20 அல்லது 27ஆம் தேதி திறக்கலாம்.இக்கருத்தினை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்து.ஏற்கனவே சனிக்கிழமைகளில் இந்த கல்வி ஆண்டு முழுவதும் வேலை செய்து நொந்துபோன மனநிலையில்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதை இந்த ஆண்டும் தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு இக்கருத்துககு செவிசாய்த்து ஏற்கனவே அறிவித்தபடி 1 முதல் 9 வகுப்புகளை ஜூன் 13ஆம் தேதி திறக்க வேண்டும் என்றும் அப்போதுதான் கல்விப் பணியில் தொய்வு இல்லாமல் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில் பின்தங்கிய வகுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டால் மாணவர்கள் எழுத்தறிவு பெறுவதில் காணப்படும் இடர்பாடுகளை தடுக்கலாம் எனவே நிச்சயமாக அரசு இக்கருத்தினை கவனத்தில் கொள்ளும் என நம்புவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.