குஜராத்தில் வெடிகுண்டை திருமணப் பரிசாக அளித்த இளைஞர்: மணமகன் காயம்

குஜராத்தில் காதலியின் சகோதரிக்கு திருமணப் பரிசாக இளைஞர் வழங்கிய பொம்மை வெடித்ததில் மணமகன் காயமடைந்தார். குஜராத் மாநிலம், வல்சாரி மாவட்டத்தில் உள்ள மிந்தாபெரி கிராமத்தைச் சேர்ந்தவர் லதேஷ் காவித். இவருக்கும், கங்காபூரைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

குஜராத்தில் காதலியின் சகோதரிக்கு திருமணப் பரிசாக இளைஞர் வழங்கிய பொம்மை வெடித்ததில் மணமகன் காயமடைந்தார்.

குஜராத் மாநிலம், வல்சாரி மாவட்டத்தில் உள்ள மிந்தாபெரி கிராமத்தைச் சேர்ந்தவர் லதேஷ் காவித். இவருக்கும், கங்காபூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் திருமண ஜோடிக்கு பரிசுப் பொருள்களைக் கொடுத்தனர்.

இந்நிலையில், லதேஷ் தன் உறவினர் ஜியான் என்பவருடன் சேர்ந்து திருமணப் பரிசுகளை உறவினர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதில் சார்ஜ் செய்யக்கூடிய பொம்மை ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பொம்மையை சார்ஜ் செய்துள்ளனர். அப்போது, அந்த பொம்மை திடீரென வெடித்துச் சிதறியது.

இதில், மணமகன் லதேஷின் தலை, கண், கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜியானுக்கும் கை, தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாக உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மணமகன் வீட்டார் அளித்த புகாரின்பேரில், அந்தப் பரிசை வழங்கியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், பரிசு வழங்கியது ராஜு படேல் என்பது தெரியவந்தது. ராஜு படேலும், மணப்பெண்ணின் மூத்த சகோதரியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து திருமணம் செய்யாமல் வாழ்ந்துவந்த நிலையில் சமீபத்தில் பிரிந்திருக்கின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த ராஜு படேல் காதலியைப் பழிவாங்குவதற்காக வெடிகுண்டு பொம்மையை காதலியின் சகோதரிக்கு திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து, போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.