”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ – சித்தார்த்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு..!

”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ என பெங்களூரு செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதை கண்டித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட…

”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ என பெங்களூரு செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதை கண்டித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள்  நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அம்மாநில விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாண்டியாவிலும் பெங்களூரிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புக்கு கர்நாடகம் முழுதும் ஆயிரத்து 900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த, டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளது.

நடிகர் சித்தார்த்தின் சித்தா நடித்த படம் இன்று தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியானது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே கர்நாடக மாநில காவிரி போராட்ட குழுவினர் திடீரென உள்ளே புகுந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பாதிலேயே நடிகர் சித்தார்த் வெளியேறினார்.

நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் எழுப்பியுள்ளார்.  இது குறித்து பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளதாவது..

பல தசாப்தங்களாக காவிரி பிரச்னையைத் தீர்க்கத் தவறிய அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானிய மக்களையும், திரைக் கலைஞர்களையும் இப்படி தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக .. கன்னடர்கள் சார்பாக. மன்னிக்கவும் “ என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.