முக்கியச் செய்திகள் தமிழகம்

முன் ஜாமீன் கோரி ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கு வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன் ஜாமீன் கோரி ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தந்தை பெரியார் திராவிட கழக வழக்கறிஞர் கண்ணன் தரப்பில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்குமாறு கோரப்பட்டது. அரசுத்தரப்பில் இது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

2018ல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா

வழக்கு முழு விபரம்

கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹெச்.ராஜா சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீதும் பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே ஹெச்.ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.

இந்நிலையில் தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற பத்திரிக்கையில் ஹெச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது என ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 27ல் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டி ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் முன் ஜாமீனுக்காக, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவேன் என உறுதியளிப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம்: ராமதாஸ் முன்வைக்கும் யோசனை!

Ezhilarasan

முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!

Halley karthi

“குழந்தைகளுக்கு பதில் என்னை சுடுங்கள்” வைரலாகும் மியான்மர் கன்னியாஸ்திரீயின் புகைப்படம்

Jeba Arul Robinson